4200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்

4200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்

Update: 2021-05-11 13:33 GMT
4,200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 97 ஆயிரத்தை கடந்து விட்டது. இதில் 88 ஆயிரம் பேர் வரை குணமடைந்து விட்டனர். இருப்பினும் கோவையில் தினசரி பாதிப்பு 2,500-ஐ கடந்து விட்டது. 

இன்னும் சில நாட்களில் ஒருநாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதுதவிர மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு காலி படுக்கைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. 

இந்த நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.

தற்போது வரை 4,200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது,
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை வசதியுள்ளவர்கள் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

 இவர்கள் அனைவரும் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.
மேலும் இணை நோய் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிப்பது இல்லை.

 வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை சுகாதார துறை அலுவலர்கள் தினமும் போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்