இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக அடித்து துன்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தாயின் 2-வது கணவர் கைது
இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கூறி தாயின் 2-வது கணவர் அடித்து துன்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 36). சமையல் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2014-ம் ஆண்டு விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அரும்பாக்கத்தில் இருவரும் வசித்து வந்தனர். சரஸ்வதிக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த தீபிகா (15) என்ற மகள் இருந்தார். அவர், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தீபிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அடித்து துன்புறுத்தல்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய தீபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் தீபிகா வீட்டில் இருப்பதால் தனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியவில்லை என்று கருதிய பிரபாகரன், அடிக்கடி தீபிகாவை அடித்து துன்புறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
2-வது கணவர் கைது
சம்பவத்தன்றும் வீட்டில் இருந்த தீபிகாவை அடித்து உதைத்த பிரபாகரன், மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் தனது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால் எங்காவது சென்று செத்துவிடு என்று திட்டியதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த மாணவி தீபிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தாயின் 2-வது கணவரான பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.