நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருந்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்து வாங்கினர்.

Update: 2021-05-10 21:05 GMT
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற ஊசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப இந்த ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது.

ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்த முடியவில்லை. ஏனென்றால் வெளிச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதாக தெரிகிறது.

இதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சென்னை தவிர மேலும் சில இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்தது. அதன்படி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கிச் செல்கிறார்கள். நேற்றும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 75 பேர் வரை டோக்கன் வழங்கப்பட்டது. 

இதில் முறைகேட்டை தடுக்கும் வகையில், டாக்டரின் பரிந்துரை, கொரோனா தொற்று பரிசோதனை சான்று, கொரோனா நோயாளியின் ஆதார் எண், மருந்து வாங்க வந்தவரின் ஆதார் எண் ஆகியவை பதிவு செய்த பிறகே வழங்கப்படுகிறது.  இதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதால் மருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், எனவே இந்த பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்