நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து டேங்கர் லாரியில் 3 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

Update: 2021-05-10 20:58 GMT
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். லேசான கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களிலும், எந்தவித அறிகுறியும் இன்றி தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகள் மட்டும் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு அளித்து சிகிச்சை அளிக்கின்றனர். இதற்காக ஆக்சிஜன் வசதி கொண்ட 800 படுக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன்கள் உள்ளன.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. திருச்சி மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென்று ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. சிலிண்டர்களில் உள்ள ஆக்சிஜன் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த ஆக்சிஜன் டேங்கர் லாரியை நெல்லைக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் அந்த டேங்கர் லாரி நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜனுடன் வந்தது. தொடர்ந்து டேங்கர் லாரியில் இருந்த ஆக்சிஜனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு கொள்கலனில் நிரப்பினர். தொடர்ந்து அந்த ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் வழங்கி பயன்படுத்தினர். இதனால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்