ரூ.2 ஆயிரம் கொரோனா நிதி: நெல்லையில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்

நெல்லையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2021-05-10 20:37 GMT
நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். அவர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொதுமக்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வரவேண்டும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 698 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 3.75 லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன. மற்ற கடைகளுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 4.10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 500-க்கும் மேற்பட்ட ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு 200 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. டோக்கனை பெற்று உள்ளவர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்