முழுஊரடங்கால் முடங்கிய நெல்லை
முழுஊரடங்கால் நேற்று நெல்லை மாநகரம் முடங்கியது
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த 2-வது அலையில் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா குறைந்தபாடில்லை. இதையடுத்து தமிழக அரசு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி முழுமையான ஊரடங்கு நேற்று தொடங்கியது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜவுளி, நகைக்கடைகள், நெல்லை ஸ்ரீபுரம் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் உள்ள மோட்டார், மின்சாதன பொருட்கள், வீடு கட்டுமான பொருட்கள் கடைகள் மூடப்பட்டன. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்கள் திறந்து இருந்தன. அங்கு பார்சல் டீ, பார்சல் சாப்பாடு மட்டும் வழங்கப்பட்டது. இதனால் காலை நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
ஆனால் காய்கறி, மளிகை கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்து இருந்தன. இதனால் காலை நேரத்தில் இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை மாநகரில் டவுன் நயினார்குளம் மொத்த மார்க்கெட் வளாகத்தில் இருந்த சில்லரை கடைகள் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட கடைகள் அங்கு அமைக்கப்பட்டு நேற்று காலை வியாபாரம் நடைபெற்றது. அங்கு பொதுமக்கள் வரிசையாக சென்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
இதேபோல் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பொதுமக்கள் அங்கு சென்று காய்கறிகள் வாங்கிச்சென்றனர். ஏற்கனவே மகாராஜ நகர் உழவர் சந்தையில் இருந்த கடைகள் அருகில் உள்ள பூங்காக்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நெல்லை மாநகரில் காலை நேரத்தில் சிறிது போக்குவரத்தும், பிற்பகலில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியும் கிடந்தன.
மேலும் பஸ், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்ல மட்டும் ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வண்ணார்பேட்டை அரசு ேபாக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் பாளையங்கோட்டை தற்காலிக புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த முழு ஊரடங்கு வருகிற 24-ந்தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.
இதேபோல் வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, அம்பை, சேரன்மாதேவி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.