நெல்லையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கொரோனாவுக்கு பலி
நெல்லையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கொரோனாவுக்கு பலியானார்.
நெல்லை:
நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சக்திநாதன் (வயது 43). இவர் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் டீனாக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் நிர்வாக பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு திரும்பினார்.
அப்போது அவருக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் சக்திநாதன் தனியார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் நேற்று மாலை இறந்தார். பின்னர் அவரது உடல் சிந்துபூந்துறை நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் டீனாக இருந்தபோது சக்திநாதன் தாமிரபரணியை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார். மேலும் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாயை தூர்வாரும் பணியிலும் தனது பங்களிப்பை அளித்தார்.
இதுதவிர நெல்லை மாநகரில் வேய்ந்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை தூர்வாரி மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தை புகுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இவரது மறைவுக்கு நீர்நிலை பாதுகாப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இறந்த பேராசிரியர் சக்திநாதனுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.