ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 இடங்களில் சோதனைச் சாவடி மையங்கள் அமைத்து கண்காணிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 இடங்களில் சோதனைச் சாவடி மையங்கள் அமைத்து கண்காணிக்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
52 சோதனைச் சாவடிகள்
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி அறிவுறுத்தலின்படி, 1 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் 20 வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது.
அதில் 200 போலீசார் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோன்று மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் 32 சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 208 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரோந்து பணி
மேலும் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், நான்கு சக்கர வாகனத்தில் ரோந்து பணியும், 228 காவலர்கள் இருசக்கர வாகனத்திலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.