மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
படுக்கைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
மேலும் தனியார் மருத்துவமனைகளில், அரசுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மாநகராட்சியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசுக்கு ஒதுக்கியுள்ள படுக்கைகளில் தனியாா் மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசாா் விசாரித்து வருகின்றனர்.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்தன.
3 பேர் கைது
இந்த நிலையில், பெங்களூருவில் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வெங்கடராவ், சுதீர் உமாராணி மற்றும் சசிதர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் வெங்கடராவ், சுதீர் ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் ஆவார்கள்.
இவர்களில் சசிதர், மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரும், மாநகராட்சியில் இருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகள் வீடு திரும்பிய பின்பும், கொரோனா நோயாளி உயிர் இழந்த பின்பும், மருத்துவமனையிலேயே அவர்கள் சிகிச்சை பெறுவதாக கூறி, வேறு நபர்களுக்கு சிசிக்சை அளித்து பணம் வசூலித்து வந்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லை என்று கூறி மற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மோசடி செய்ததும் தெரியவந்தது. கைதான 3 போிடமும் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.