வங்கி ஊழியர்கள் உள்பட 15 பேர் ஒரே நாளில் பலி
வங்கி ஊழியர்கள் உள்பட 15 பேர் ஒரே நாளில் பலி
கோவை
கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக 2 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,097 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 706 ஆக உள்ளது.
கோவை அரசு மருத்துவ மனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.
இந்தநிலையில், கோவையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் 58 வயது ஆண் ஒருவர் குனியமுத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இதேபோல் அதே வங்கிக்கு சொந்தமான அவினாசி ரோடு லட்சுமி மில் அருகில் உள்ள கார் லோன் பிரிவில் வேலை பார்த்து வந்த 58 வயது 2 பெண் ஊழியர்கள் கொரோனாவால் இறந்தனர்.
மேலும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது ஆண், 60 வயதுடைய 2 பேர், 83 வயது முதியவர், 39 வயது ஆண், 61 வயது முதியவர், 77 வயது முதியவர் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது ஆண், 73 வயது மூதாட்டி, 42 வயது ஆண், 83 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.