ரூ.38 கோடிக்கு மது விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மது விற்பனை மும்முரம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் வருகிற 24ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை மும்முரமாக நடைபெற்றது.
ரூ.38 கோடி
மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை உற்சாகமாக வாங்கி சென்றனர். 2 வாரத்திற்கு தேவையானவற்றை பலரும் வீடுகளுக்கு வாங்கி சென்றார்கள். இதன் காரணமாக கடந்த 8-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.
அதன்படி கடந்த 8ந் தேதி மட்டும் மாவட்டத்தில் ரூ.18 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. 2வது நாளான நேற்று முன்தினம் கூடுதலாக ரூ.2 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. அதாவது ரூ.20 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக மதுவிற்பனை வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர். ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிப்பிற்கு முந்தைய 2 நாட்களில் ரூ.38 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.