சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு ‘சீல்’; ஒரே மாதத்தில் ரூ.1.18 கோடி அபராதம் வசூல்

கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளி, கிருமிநாசினி, முககவசம் அணிவது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-05-10 11:47 GMT
ஆனால் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகார்கள் வந்தன. எனவே விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து ‘சீல்’ வைக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அதிகாரி தலைமையிலான குழுவினர் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி கடந்த வாரம் சென்னை தியாகராயநகர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி விட்டு கடைக்கு ‘சீல்’ வைத்தனர். அதேபோல் பல பிரபலான ஜவுளிக்கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் அவர்கள் முறையீடு செய்து உரிய சமூக இடைவெளியை கடை பிடிப்பதாக உறுதி அளித்த பிறகுதான் கடைகள் திறக்கப்பட்டது. மேலும் சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறியவர்கள் மீது கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ரூ.1.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்