திருச்செங்கோட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் கொலையில் 8 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி

திருச்செங்கோட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் கொலை வழக்கில் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-05-10 00:13 GMT
எலச்சிபாளையம், 

திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் முருகன். கேபிள் டி.வி. ஆபரேட்டர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி கோவிலுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்மநபர்கள் வழிமறித்து அவரை இரும்பு ராடால் தாக்கியதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் மர்மநபர்களை பிடிக்க திருச்செங்கோடு நகர போலீஸ் நிலைய இன்ஸ்ெபக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வந்தது. 

இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக சங்ககிரி பகுதியை சேர்ந்த பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ஜெயராமன், சேலத்தை சேர்ந்த செல்வம், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 27), செங்கோடம் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (28), அவரது தம்பி மொட்டையன் என்ற குமார் (26), புள்ளிபாளையத்தை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (27), செங்கோடம் பாளையத்தை சேர்ந்த கார்த்தி (26) மற்றும் அர்ஜூன் (27) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

கடன் பிரச்சனை

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் சங்ககிரியை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் தர வேண்டியிருந்தது. இந்தநிலையில் காமராஜ் கடந்த 1½ ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயராமன், காமராஜின் குடும்பத்தினரிடம் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இதனை அறிந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் முருகன், காமராஜ் குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் ஜெயராமனை கண்டு பயப்பட வேண்டாம் என்று கூறினாராம்.

 இதனை அறிந்த ஜெயராமன் கேபிள் டி.வி. ஆபரேட்டர் முருகன் மீது ஆத்திரத்தில் இருந்தார். தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வந்த முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி ஜெயராமன், சூர்யா, மணிகண்டன், குமார், மற்றொரு மணிகண்டன் கார்த்தி, செல்வம், அர்ஜுன் ஆகிய 8 பேர் சம்பவத்தன்று முருகன் தனியாக வருவதை நோட்டமிட்டு அவரை வழிமறித்து இரும்பு ராடால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைதான 8 பேரையும் போலீசார் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்