வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களை இயக்க கோரி கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் திடீர் மறியல்

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களை இயக்க கோரி கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-09 21:08 GMT
கோவை

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களை இயக்க கோரி கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாநில தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்புகிறார்கள். 

பெரும்பாலான வடமாநிலங்களுக்கு தங்கள் ஊர்களுக்கு செல்ல ரெயில்களை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பயணிகள் வருகை குறைந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் ஆம்னி பஸ்கள் மூலம் பீகார், மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில ஆம்னி பஸ்களில் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் ஏற்றி சென்றதாகவும், முறையான உரிமம் இல்லாததாலும் 4 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மறியல் போராட்டம்

இதைத் தொடர்ந்து கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களை ஏற்றி செல்லும் என்று முன்பதிவு செய்த பஸ்கள் இயங்காது என்று பஸ் உரிமையாளர்கள் திடீரென்று அறிவித்தனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பிரேமானந்த் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் தேசிய உரிமம் பெற்றிருக்கும் பஸ்களில் மட்டும் வடமாநில தொழிலாளர்களை ஏற்றி அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும் மற்றவர்களை ரெயில் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஆம்னி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்