மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது; 2 சரக்கு வேன்- சொகுசு கார் பறிமுதல்
மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வேன் மற்றும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூர்
மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வேன் மற்றும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
101 மூட்டை
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜான், பொன்னையன், தனிப்பிரிவு ஏட்டுகள் முருகன், தேவராஜ் மற்றும் போலீசார் அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் ரோட்டில் பர்கூரை அடுத்த தட்டக்கரை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வேன்கள் மற்றும் சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது 2 சரக்கு வேன்கள் மற்றும் சொகுசு காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 101 மூட்டைகளில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சுற்றி வளைப்பு
இதைத்தொடர்ந்து 2 சரக்கு வேன்கள் மற்றும் சொகுசு காரில் வந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 3 பேர் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ‘அவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 33), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த்சிங் (28), பல்வந்த்ராம் (21) என்பதும், அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும்,’ தெரியவந்தது.
3 பேர் கைது
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.12 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தியதாக பாலசுப்பிரமணியம், ஆனந்த்சிங், பல்வந்த்ராம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 101 மூட்டை புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வேன்கள், சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.