முழு ஊரடங்கையொட்டி ஈரோடு பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் ஈரோடு பஸ்- ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் ஈரோடு பஸ்- ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், பஸ்கள் இயக்கப்படாது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்படவும், அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற கடைகளை திறக்கவும் அனுமதி கிடையாது. எனவே ஈரோட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பினார்கள்.
முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியானதும் அவர்கள் அவசர அவசரமாக ரெயில்களில் முன்பதிவு செய்தார்கள். ரெயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பஸ்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
பயணிகள் கூட்டம்
பயணிகளின் வசதிக்காக கடந்த 2 நாட்களாக இரவிலும் தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் வெளியூரில் இருந்தும் பலர் ஈரோடு திரும்பினர். இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு ஒலி பெருக்கி மூலமாக நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே உட்கார அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் சில பஸ்களில் பயணிகள் அதிகமாக ஏறி பயணம் செய்தனர்.
ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலேயே பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.