உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் கடம்பூர் பஸ் நிலையம்; பயணிகள் அவதி
உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் கடம்பூர் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
டி.என்.பாளையம்,
உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் கடம்பூர் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
பஸ் நிலையம்
சத்தியமங்கலத்தை அடுத்த மலைப்பகுதியில் கடம்பூர் உள்ளது. கடம்பூரை சுற்றிலும் 60-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு கடம்பூர் தான் முக்கிய இணைப்பு பகுதியாக உள்ளது. இதனால் இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன.
இதன்காரணமாக கடம்பூர் பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வர். இரவு நேரங்களில் கடம்பூர் பஸ் நிலையத்தில் மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல இருளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மின்விளக்குகள் எரியவில்லை
எனவே பஸ் ஏற வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடம்பூர் பஸ் நிலையத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது ஆனால் கடந்த 6 மாதங்களாக இந்த உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் கும்மிருட்டாக காணப்பட்டது. இதன்காரணமாக பஸ்சில் ஏற முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
கோரிக்கை
மேலும் பஸ் நிலைய பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து உள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்தது.
இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே கடம்பூர் பஸ் நிலையத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.