சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

Update: 2021-05-09 19:27 GMT
திருப்பூர்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்துகொடுக்கப்படுகின்றன.
இங்கு தங்கியிருந்து பலரும் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சமும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சமும் இருக்கிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். இந்த வடமாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் திருப்பூரில் தான் இருப்பார்கள்.
சொந்த ஊர்களுக்கு...
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழு நேர ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பூரில் இருந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் சொந்த ஊர்களுக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களுக்கு செல்கிற பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய வருகிறார்கள். முன்பதிவு செய்தவர்களும் ரெயில்களுக்காக ரெயில் நிலையத்தில் காத்திருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்