உடுமலை நகர பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகம்
பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதால் உடுமலை நகர பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தனியார் பஸ்களில் 2மட்டுமே ஓடின.
உடுமலை
பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதால் உடுமலை நகர பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தனியார் பஸ்களில் 2மட்டுமே ஓடின.
அரசு பஸ்கள் ஓடின
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வெளியூரைச்சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேரும் வகையில் கடந்த 2 நாட்களாக வெளியூர் செல்வதற்கு இரவு நேர பஸ்களும் இயக்கப்பட்டன. உடுமலையை பொறுத்தவரை நேற்று முன்தினம் போன்றே, நேற்றும் பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உடுமலை கிளையில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன்பஸ்கள் 58-ம் என மொத்தம் 94 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்களில் 52-ம் என மொத்தம் 88 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கோவை மற்றும் பழனிக்கு செல்லும் பஸ்களில் மட்டும் காலையில் ஓரளவு கூட்டம் இருந்தது.
தனியார் பஸ்கள்
டவுன்பஸ்களில் பயணம் செய்வதற்கு பெண்களுக்கு இலவசம் என்ற நிலையில் அமராவதிநகர், மடத்துக்குளம், கொழுமம், ஆண்டிபட்டி, குடிமங்கலம்உள்ளிட்ட சில வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இதில் பெண் பயணிகள் அதிகம் இருந்தனர். சில வழித்தடங்களில் இயக்கப்பட்ட டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
உடுமலையில் வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் 5-ம், தனியார் டவுன் பஸ்கள் 19-ம் என மொத்தம் 24 தனியார் பஸ்கள் உள்ளன. இதில், பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்த நிலையில் நேற்று வெளியூர் செல்லும் 2 தனியார் பஸ்கள் மட்டும் ஓடின. மற்ற 22 தனியார் பஸ்களும் ஓடவில்லை.