கர்நாடகத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் முழு அளவில் தொடங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி முழு அளவில் தொடக்கம்

Update: 2021-05-09 18:05 GMT
பெங்களூரு:


கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அடுத்தக்கட்ட தடுப்பூசி

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். கர்நாடகத்தில் 18 வயதில் இருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 3.26 கோடி ஆகும். இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்க 6.52 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது.

இந்த வயது உடையவர்களுக்காக 3 கோடி டோஸ் கொள்முதல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்குகிறது. அதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசின் மையங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.

 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கர்நாடகம் தனது பணி ஆணையில் இதுவரை 6.5 லட்சம் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளது. அடுத்தக்கட்ட தடுப்பூசி வருகிற 2-வது அல்லது 3-வது வாரத்திற்கு பிறகே வரும்.

18 வயது நிரம்பியவர்கள்
கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி முழு அளவில் தொடங்குகிறது. ஆனால் ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி வழங்கப்படும். பெங்களூருவில் ஜெயநகர் அரசு ஆஸ்பத்திரி, சர்.சி.வி.ராமன் ஆஸ்பத்திரி, அரசு மருத்துவ கல்லூரிகள், ராஜாஜிநகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, நிமான்ஸ் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படும்.

பிற மாவட்டங்களில் அரசு மாவட்ட ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள், தாலுகா ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு 7 நாட்களுக்குள் தடுப்பூசி போடுவதற்கான தேதி ஒதுக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறவர்கள் கோவின் செயலி அல்லது ஆரோக்கிய சேது செயலியில் தங்களின் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்