சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 14 கொரோனா நோயாளிகள் இறந்தனர்.

சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 14 கொரோனா நோயாளிகள் சாவு

Update: 2021-05-09 17:57 GMT
கொள்ளேகால்:
 
நீதிபதி தலைமையில்...

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு முதல் 3-ந் தேதி காலை வரை 24 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 கொரோனா நோயாளிகளும் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. 
இந்த சம்பவம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவயோகி கலசத் தலைமையில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டு இருந்தது. 

மேலும் 14 பேர் சாவு 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 14 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு உண்டானது. 

இறந்து போன 14 கொரோனா நோயாளிகளின் உடல்களையும் சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தான் 14 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறி உள்ளனர். 

ஆனால் இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் முற்றிலும் மறுத்து உள்ளது. 8 கொரோனா நோயாளிகளுக்கு கொரோனாவுடன் வேறு சில பிரச்சினைகள் இருந்ததாக கூறியுள்ள ஆஸ்பத்திரி நிர்வாகம், 6 கொரோனா நோயாளிகள் சாவுக்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளது. ஏற்கனவே கொரோனா நோயாளிகள் 24 பேர் இறந்த நிலையில் தற்போது மேலும் 14 கொரோனா நோயாளிகள் இறந்த சம்பவம் சாம்ராஜ்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்