காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

நொய்யல் அருகே போலீசார் வாகன சோதனையில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-09 17:33 GMT
நொய்யல்
மதுபாட்டில்கள் கடத்தல்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார்  நொய்யல் அருகே சேமங்கி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
கார் பறிமுதல்
விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம் ஜெகதாபி கிழக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 26) கார் டிரைவர், கரூர் திருச்சி மெயின் ரோடு காவிரி நகரை சேர்ந்த வேல் என்கிற சரவணன் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, காருடன் அதில் இருந்த 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
அதியமான்கோட்டை 
இதேபோல், அதியமான்கோட்டை டாஸ்மாக் அருகே பாண்டிபாளையம் பிரிவு சாலையில் மது விற்று கொண்டிருந்த செம்படாபாளையம் கடை வீதியை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி பெரிய புதூரில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், தோகைமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (46) என்பவர் தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
லாலாபேட்டை-குளித்தலை 
லாலாபேட்டையை அடுத்த பாலப்பட்டி மூன்று ரோடு பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு மதுவிற்ற வரகூரை சேர்ந்த தியாகராஜன்( 32), லட்சுமணன்(45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 250 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர், வை.புதூர், நடுப்பட்டி பாலம், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் மது விற்ற சுந்தர்ராஜன் (53), கரிகாலன் (52), கண்ணன் (56), பழனிவேல் (45) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 108 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்