மடிக்கணினி பரிசு கிடைத்துள்ளதாக கூறி என்ஜினீயர் வங்கி கணக்கில் ரூ.4.18 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை
மடிக்கணினி பரிசு கிடைத்துள்ளதாக கூறி என்ஜினீயர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
மடிக்கணினி பரிசு கிடைத்துள்ளதாக கூறி என்ஜினீயர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ஸ்ரீராம் (வயது 45). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை அடிக்கடி வாங்கி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) பரிசாக கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்தி விட்டு மடிக்கணினியை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
ரூ.4.18 லட்சம் அபேஸ்
இதையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தி உள்ளார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர் பணம் வரவில்லை. 2-வது முறை அனுப்புமாறு கூறினார். இதையடுத்து அவர் மீண்டும் பணம் அனுப்பினார். பின்னர் அவர் வங்கி கணக்கை பார்த்த போது ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 567 அபேஸ் செய்து அந்த நபரின் வங்கி கணக்கிற்கு சென்றிருந்தது தெரிய வந்தது.
மேலும் மடிக்கணினி கொடுக்காமல், அந்த நபர் பணத்தை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ஸ்ரீராம், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.