கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் உள்பட 5 பேர் பலியாகினர்.

Update: 2021-05-09 17:15 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் உள்பட 5 பேர் பலியாகினர்.
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்த 65 வயதுடையவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது 60 வயது மனைவி, 33 வயது மகன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் மருந்து எடுத்துக் கொண்டனர். 
இந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்
 ஓசூரில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் பகுதியை சேர்ந்த 2 பேர் அந்த பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தனர்.
மேலும் புகைப்பட கலைஞர்களாக வேலை பார்த்து வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர்கள் 2 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு இறந்தது ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போட்டோ ஸ்டூடியோ மற்றும் அவர்கள் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வெளிநபர்கள் அந்த பகுதிக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்