கல்லாறு பழப்பண்ணையில் மனதை மயக்கும் பாறை ஓவியங்கள்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணையில் மனதை மயக்கும் வகையில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.;

Update: 2021-05-09 16:58 GMT
மேட்டுப்பாளையம் 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணையில் மனதை மயக்கும் வகையில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 

கல்லாறு பழப்பண்ணை 

மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி செல்லும் மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் கல்லாறு அரசு தோட்டக் கலைப்பண்ணை உள்ளது. 

8.92 எக்டர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த பண்ணையில் பல்வேறு வகையான பழ மரங்கள், வாசனை திரவிய பயிர்கள், அலங்கார செடி வகைகள், பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் பழப்பண்ணையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து விளையாடி மகிழும் செயற்கை அருவிகள், சிறுவர்கள் துள்ளி விளையாட சிறுவர் பூங்கா என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ளது.

பாறையில் ஓவியங்கள் 

இந்த பண்ணையில் பழமையை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் காண்போர் வியக்கும் வண்ணம் ராட்சத விழுதுகளுடன் வானுயர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. 

கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த பண்ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் பழங்கள் வாங்க செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த பூங்கா மலைப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு ஆங்காங்கே ஏராளமான பாறைகள் உண்டு. இதற்கிடையே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில், அந்த பாறைகளில் பல்வேறு வகையான விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. 
அழகாக இருக்கிறது 

குறிப்பாக படுத்து ஓய்வு எடுக்கும் புலி, வேட்டைக்கு தயாராகும் சிறுத்தை, குரங்கு, துள்ளி ஓடும் மீனை முதலை பிடித்து விழுங்குவது, கரடி என்று பாறைகளில் வரையப்பட்ட ஓவியங் களை பார்க்கவே அழகாக இருக்கிறது. 

இந்த ஓவியங்கள் நிச்சயமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க இங்கு ஏராளமான பணிகள் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்