ஊட்டி தாவரவியல் புதிய வெளிநாட்டு மலர் ரகங்கள் அறிமுகம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதிய வெளிநாட்டு மலர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி இந்த மாதம் 124-வது மலர் கண்காட்சி நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி கடந்த டிசம்பர் மாதம் முதல் மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்களில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
மேலும் 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டன. இப்போது செடிகளில் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறது. ஆனால், இதனை பார்க்க சுற்றுலா பயணிகள் இல்லை.
கோடை சீசனுக்காக வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து விதை ரகங்கள் பெறப்பட்டு நர்சரியில் பராமரிக்கப்படும். அதேபோல் பூங்காவில் முதன் முதலாக 3 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. காலா லில்லி, லிமோனியா, பாட் ஜெர்புரா மலர் செடிகள் நர்சரியில் விதைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
குறிப்பிட்ட நாட்களில் ஓரளவு வளர்ந்த பின்னர் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டது. தற்போது கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஹாலந்து நாட்டில் இருந்து புதியதாக காலா லில்லி, லிமோனியா, பாட் ஜெர்புரா மலர்களின் விதைகள் பெறப்பட்டது. குறிப்பிட்ட வெப்பநிலையில் வளர்க்கப்பட்டு, தற்போது காலா லில்லி 350 பூந்தொட்டிகளிலும், லிமோனியா 300 பூந்தொட்டிகளிலும், பாட் ஜெர்புரா 300 பூந்தொட்டிகளிலும் கண்ணாடி மாளிகை மற்றும் நர்சரியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதில் மலர்கள் பூத்துக்குலுங்குவதால் வண்ண மயமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மலர் கண்காட்சி நடப்பது கஷ்டம். இருப்பினும் பணியாளர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.