கொரோனா விதிகளை மீறிய 2 கடைகளுக்கு ‘சீல்’
ஊட்டியில் கொரோனா விதிகளை மீறிய 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் செயல்பட்டு வரும் கடைகளில் அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனர். அங்கு நோய் தொற்றை பரப்பும் வகையில் முககவசம் அணியாமல் இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஒரு தனியார் மருந்தக உரிமையாளருக்கு (எச்.பி.எப்.) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும், அங்கு பணிபுரிபவர்கள் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த மருந்தகத்தின் உள்ளே கிளினிக் செயல்பட்டதுடன், அங்கு டாக்டர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. உடனடியாக சுகாதார அதிகாரிகள் பணியாளர்களை வெளியேறும்படி கூறி மருந்தகத்தை மூடி சீல் வைத்தனர்.
இதேபோல் ஊட்டி சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் எதிரே இயற்கை உணவு பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி உரிமையாளருக்கு (அன்பு அண்ணா காலனி) தொற்று உறுதியானது. அங்கு பணிபுரிபவர்கள் சோதனை மேற்கொள்ளாததால் அங்காடியும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மருந்தகம், அங்காடியில் பணிபுரிபவர்கள் சளி மாதிரி கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வழங்க வேண்டும்.
அதன் பின்னர் அவற்றை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மருந்தகம், அங்காடி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.