திருவண்ணாமலையில் டாக்டரை மிரட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது

திருவண்ணாமலையில் டாக்டரை மிரட்டி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-09 14:58 GMT
திருவண்ணாமலை,

விழுப்புரம் மாவட்டம் மகாராஜாபுரம் மகாதேவன் நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வசித்து வருகிறார். சரண்ராஜ் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வேட்டவலம் சாலையில் வந்து கொண்டு இருந்த போது 4 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அடித்து உதைத்து, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருவண்ணாமலை கீழ்நாத்தூர் காலனி பகுதியை சேர்ந்த நாவரசு (23), தினேஷ் (25) உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நாவரசு, தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்