2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்: சமூக இடைவெளியை மறந்து பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்

டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக குடிமகன்கள் குவிந்தனர். அதேபோல் மளிகை, காய்கறிகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் திரண்டனர்.

Update: 2021-05-09 14:12 GMT
திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை வாங்குவதற்காக 2-வது நாளாக நேற்று நகரின் முக்கிய வீதிகளில் திரண்டனர். கடைகள், மார்க்கெட், ஜவுளிக்கடைகள் என அனைத்து கடைகளும் நேற்று மட்டுமே செயல்படும் என்பதால் ரதவீதிகள், மார்க்கெட் சாலை, கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பின்னர் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு அவற்றை அட்டை பெட்டிகளிலும், சாக்கு பைகளிலும் வைத்து வீடுகளுக்கு பொதுமக்கள் எடுத்துச்சென்றனர். கிழக்கு ரதவீதியில் மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு பொதுமக்கள் நெருக்கமாக சென்றனர். அந்த சாலையில் வாகனங்கள் வேறு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கூட்ட நெரிசலை சரிசெய்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்லும்படி பொதுமக்களை எச்சரித்தனர்.
மதுவாங்க குவிந்த குடிமகன்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 158 மதுபான கடைகள் உள்ளன. இதில் திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக 2-வது நாளாக நேற்றும் குடிமகன்கள் குவிந்தனர். காலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை களைகட்டியது. இருவாரங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிய குடிமகன்கள் அவற்றை சாக்கு பைகளில் கட்டி எடுத்துச்சென்றதை காண முடிந்தது.
இந்த நிலையில் நேற்று மதியத்துக்குள் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்று தீர்ந்தது. இதனால் குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. மளிகை கடைகள், மார்க்கெட் பகுதியை போல் டாஸ்மாக் கடைகளிலும் நேற்று சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்கள் நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர். அவர்களில் பலர் முக கவசம் அணிந்திருந்தனர் என்பது சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
வேடசந்தூரில் ஊரடங்கையொட்டி கடைசிநேர மது விற்பனை களை கட்டியது. மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு முண்டியடித்துக்கொண்டு மது வாங்கினர். மாலை 6 மணிக்கு மதுக்கடை பூட்டப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள். டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கூடுதலாக மது கேட்டு கெஞ்சிய காட்சியை காணமுடிந்தது.  
-

மேலும் செய்திகள்