வேலைக்கு சென்ற சிறுமி மாயம் நூற்பாலை முன் உறவினர்கள் தர்ணா

வேலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை. இதனால் உறவினர்கள் நூற்பாலை முன் தர்ணா செய்தனர்.

Update: 2021-05-09 14:07 GMT

வடமதுரை:
அய்யலூர் அருகே உள்ள முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கோகிலா (வயது 17). இவர் வடமதுரை நாடுகண்டானூர் பிரிவு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகிலாவை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக நேற்று அவரது பெற்றோர் நூற்பாலைக்கு சென்றனர். அப்போது நூற்பாலை நிர்வாகத்தினர் கடந்த 2 நாட்களாக கோகிலாவை காணவில்லை என்று கூறினர். இதனால் கோகிலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கோகிலா காணாமல் போன விஷயத்தை ஏன் முன்பே எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி அவரது பெற்றோர் நூற்பாலை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் கோகிலாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் நூற்பாலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாயமான கோகிலாவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்