திண்டுக்கல்லில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் உடல் அடக்கம்

திண்டுக்கல்லில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் உடல் அடக்கம் நடந்தது.

Update: 2021-05-09 13:40 GMT
திண்டுக்கல்:
 மூக்குப்பொடி சித்தர் என அழைக்கப்பட்ட பிச்சைசாமிகள், திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே கடந்த பல ஆண்டுகளாக வசித்தார். திண்டுக்கல்லில் பிரபலமான இவரிடம், அடி வாங்குபவர்களின் துன்பம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர் இந்த சித்தர். இவருடைய பெயர் பாக்கியநாதன் (வயது 70). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிச்சைசாமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதையறிந்த அவருடைய குடும்பத்தினர் கடந்த 7-ந்தேதி திண்டுக்கல்லுக்கு வந்து, அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதுமே அவருடைய உயிர் பிரிந்தது.
இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பிச்சைசாமிகளின் உடலை நேற்று முன்தினம் நள்ளிரவில் திண்டுக்கல்லை அடுத்த குஞ்சனம்பட்டிக்கு அவருடைய குடும்பத்தினர் கொண்டு வந்தனர். பின்னர் நேற்று அதிகாலையில் பிச்சைசாமிகளின் உடலுக்கு இளநீர், தேன், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் 21 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆத்மபூஜை நடந்தது. தொடர்ந்து பிச்சைசாமிகளின் உடலை அங்குள்ள தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சமாதிக்குள் அமர்ந்த நிலையில் வைத்து மூடினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் அந்த சமாதி மீது பிரதிஷ்டை செய்வதற்காக காசியில் இருந்து 1½ அடி உயரத்தில் சிவலிங்கம் கொண்டுவரப்பட்டது. இந்த சிவலிங்கத்துக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்து பிச்சைசாமிகளின் சமாதி இருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்