நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி 2,295 பேருக்கு பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி 2,295 பேருக்கு பாதிப்பு

Update: 2021-05-08 23:25 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் முதலே கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வந்தாலும், ஒரிரு உயிர்பலி மட்டுமே ஏற்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கம் முதலே கொரோனா பரவும் வேகம் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதே நேரத்தில் உயிர்பலி அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சுகாதாரத்துறை அறிவிப்பின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 8 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். இறந்தவர்களில் 8 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர். 2 பேர் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இறந்த அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் முதியவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

2,295 பேருக்கு பாதிப்பு

கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை முடிந்த ஒரு வாரத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 71 சிறுவர், சிறுமிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர 13 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,008 பேரும், 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் 857 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 359 பேரும் என மொத்தம் ஒரே வாரத்தில் 2,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவின் முதல் அலையில் சிறுவர், சிறுமிகள் மிக குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 2-வது அலையில் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளம் வயதுடையோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்