குடும்பத்தகராறில் தலையில் தாக்கி கீழே தள்ளினார்: தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் கைது
குடும்பத் தகராறில் தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளி கொலை செய்துவிட்டு, உணவு ஒவ்வாமையால் அவர் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பாள்நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 74). இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் சபரீஷ் (31). இவர், தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ‘டெலிவரி’ செய்யும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி சபரீஷ், தனது தந்தை பிரேம்குமார் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக கூறி அரசு ஆஸ்பத்திரியில் தந்தையை அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சபரீஷ், பள்ளிக்கரணை போலீசில் தனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து தரவேண்டும் என புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனையில் பிரம்குமார் தலையில் அடிப்பட்டு இருப்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் சபரீசை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரது தலையில் தாக்கி கீழே தள்ளிவிட்டதும், பின்னர் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரே உணவு ஒவ்வாமை காரணமாக மயங்கி விழுந்து விட்டதாக நாடகமாடியதும் தெரிந்தது.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சபரீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.