‘மூக்குப்பொடி சித்தர்' என அழைக்கப்பட்ட பிச்சைசாமிகள் மரணம்
திண்டுக்கல்லில் ‘மூக்குப்பொடி சித்தர்' என அழைக்கப்பட்ட பிச்சைசாமிகள் மரணம் அடைந்தார்.
திண்டுக்கல்:
பிச்சைசாமிகள்
இறைவனை அனுதினமும் தியானித்து அருளை பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்தர்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் அமானுஷ்யம் நிறைந்ததாக இருக்கிறது.
அத்தகைய சித்தர்கள், இன்றும் நம்மிடையே வாழ்வதாக கூறப்படுகிறது.
மேலும் சாதாரண மனிதர்களாக உலவும் சித்தர்களை அடையாளம் கண்டு ஒருமுறையாவது தரிசனம் செய்துவிட்டால் பெரும் பாக்கியம் என்று ஆன்மிக பெரியவர்கள் கூறுவார்கள்.
அந்த வகையில் போகர், புலிப்பாணி போன்ற மகா சக்தி படைத்த சித்தர்கள் வாழ்ந்த பெருமை திண்டுக்கல் மாவட்டத்துக்கு உண்டு.
திண்டுக்கல், பழனி, தவசிமடை, கன்னிவாடி உள்பட பல ஊர்கள் சித்தர்களின் வரலாற்றை கூறுகின்றன.
அந்த வரிசையில், திண்டுக்கல்லில் வாழ்ந்து மறைந்த பிச்சை சாமிகளும் சித்தரே என்று அவருடைய பக்தர்கள் கூறுகின்றனர்.
இவர் பிச்சைசாமிகள், மூக்குப்பொடி சித்தர், திண்டுக்கல் சித்தர் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டார்.
ராணுவ வீரர்
இவருடைய பெயர் பாக்கியநாதன் (வயது 70).
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் இவருடைய சொந்த ஊராகும்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.
குடும்பத்தை விட்டு பிரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல்லுக்கு வந்து விட்டார்.
குடும்பத்தினர் நேரில் வந்து அழைத்தும், அவர்களுடன் செல்ல மறுத்து திண்டுக்கல்லிலேயே தங்கி விட்டார்.
மெலிந்த தேகம், நீண்ட சடைமுடி, பழைய ஆடை சகிதமாக திண்டுக்கல்லில் இவர் சுற்றித்திரிந்தார்.
யாரிடமும் பேசுவதில்லை. மவுனம், கூர்மையான விழிகளில் தீர்க்கமான பார்வை ஆகியவை அவரிடம் இருக்கும் அமானுஷ்ய சக்தியாகவே பக்தர்கள் கருதினர்.
டீ, பிஸ்கட் மட்டுமே அவருடைய தினசரி உணவாக இருந்தது. அதை கூட யாரிடமும் அவர் கேட்பதில்லை.
அடிவாங்க காத்திருந்த பக்தர்கள்
மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள திண்டுக்கல் வெள்ளைவிநாயகர் கோவில் பகுதியே, இவருடைய வசிப்பிடமாக இருந்தது. இவருக்கென தனியாக பக்தர்கள் கூட்டமே இருக்கிறது.
திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்தனர். டீ, பிஸ்கட், பழம், மூக்குப்பொடி, பணம் என பக்தர்கள் அவருக்கு அருகில் வைப்பார்கள்.
அதில் பணத்தை தவிர, ஏதாவது ஒன்றை எப்போதாவது எடுப்பார். இதனால் சம்பந்தப்பட்ட நபரின் கஷ்டம் தீர்ந்ததாக நம்பப்பட்டது.
இதேபோல் அவரிடம் அடி வாங்கினால் துன்பம் பறந்து போகும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தது.
இதற்காக தினமும் அவருக்கு அருகில் காத்து கிடந்த மக்கள் அதிகம்.
குறிப்பாக பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் அவரை தரிசனம் செய்ய பலர் வருவார்கள்.
ஒருசில நாட்களில் காலையில் ஏதாவது ஒரு கடை வாசலில் படுத்திருப்பார். அதுபோன்ற நேரங்களில் அவரை யாரும் எழுப்ப முயற்சிப்பது இல்லை.
அவர் எழுந்து செல்லும் வரை காத்திருந்து அதன்பின்னரே கடையை திறப்பார்கள்.
மரணம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிச்சைசாமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
இதை அறிந்த அவருடைய குடும்பத்தினர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்து, அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த அவருடைய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே அவரை அங்கு அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு நடந்தது.
ஆனால், பிச்சைசாமிகளின் உடலை திண்டுக்கல்லில் அடக்கம் செய்வதற்கு பக்தர்கள் விரும்பினர்.
இதற்காக பக்தர்கள், திருவண்ணாமலைக்கு சென்று அவருடைய உடலை திண்டுக்கல்லுக்கு கொண்டு வருகின்றனர்.