ஈரோடு கோட்டத்தில் 297 பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

ஈரோடு கோட்டத்தில் 297 பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-08 20:39 GMT
ஈரோடு
ஈரோடு கோட்டத்தில் 297 பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு இலவசம்
தமிழ்நாட்டில் உள்ள டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். அவர் பதவி ஏற்ற உடன் கையொப்பமிட்ட 5 முக்கிய கோப்புகளில் இந்த உத்தரவும் ஒன்றாக இருந்தது. இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் கட்டணமில்லாத பஸ்களை அடையாளம் காணும் வகையில் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
297 பஸ்கள்
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று காலை இந்த பஸ்களில் முதல் முதலாக இலவச அனுமதியுடன் பயணம் செய்ய வந்த பெண்களுக்கு கண்டக்டர்- டிரைவர்கள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு கோட்ட பொது மேலாளர் கூறும்போது, “ஈரோடு கோட்டத்துக்கு உள்பட்ட 297 பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது”, என்றார். 
கட்டணமில்லாமல் பஸ்சில் பயணம் செய்து, அதுவும் கொரோனா காலத்தில் 50 சதவீத பயணிகளுடன் எந்த நெரிசலும் இன்றி நேற்று பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர். கண்டக்டர்களும் ஆண்கள் பக்கத்திலேயே நின்று டிக்கெட் கொடுத்தனர். பெண்கள் பகுதிக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆண்கள்தான் சற்று பெருமூச்சு விட்டபடி பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்