நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: லாரி சக்கரம் ஏறியதில் ஆட்டோ டிரைவர் சாவு
லாரி சக்கரம் ஏறியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவர் தனது தங்கையின் கணவரும், ஆட்டோ டிரைவருமான சதீஷ்குமாருடன் (22) நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை சந்தோஷ்குமார் முந்தி செல்ல முயன்றார். அந்த சமயத்தில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், சந்தோஷ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் நிலைதடுமாறி சந்தோஷ்குமார், சதீஷ்குமார் ஆகியோர் சாலையில் விழுந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சதீஷ்குமார் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், சந்தோஷ்குமார் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். சந்தோஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.