8 கடைகள் மீது வழக்கு

கொரோனா விதிமுறைகளை மீறிய 8 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2021-04-30 18:06 GMT
ராமநாதபுரம், மே.1-
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்து கடுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 3ஆயிரம் சதுர அடிக்கு மேல் பொதுமக்கள் கூடும் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அதை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
இதன்படி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வர்த்தக நிறுவனங்கள் வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை அரசின் உத்தரவை மீறி திறந்து செயல்பட்டது தெரியவந்தது. 
இது தொடர்பாக 8 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த விசாரணையை தொடர்ந்து மீண்டும் மேற்கண்ட கடைகள் திறந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்