நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 327 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Update: 2021-04-30 18:06 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 15,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,654 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், அரசு பள்ளி ஆசிரியை, அரசு ஆஸ்பத்திரியின் ஆய்வக உதவியாளர் உள்பட 327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,981 ஆக உயர்ந்தது.
1,794 பேருக்கு சிகிச்சை
இதில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், மோகனூர் மற்றும் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 228 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 122 பேர் பலியாகி இருந்த நிலையில், 14,065 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,794 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் பலி
இதனிடையே பரமத்திவேலூரை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் ராசிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தது. கடந்த 24-ந் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்