பிள்ளாநல்லூரில்குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பிள்ளாநல்லூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-30 18:06 GMT
நாமக்கல்:
பிள்ளாநல்லூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள 7-வது வார்டு தோப்புக்காட்டில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை கண்டித்து அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன்‌ ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வண்டிப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தர்ணா
அப்போது போக்குவரத்தை தடை செய்வது சட்டப்படி குற்றம், இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் எடுத்துக்கூறினர். மேலும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பேரூராட்சியில் முறையிடுமாறும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். 
இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் மறியலை கைவிட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அவர்களிடம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், 22 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தில் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெண்களின் திடீர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்