மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

பூம்புகாரில், மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-30 18:01 GMT
திருவெண்காடு:
பூம்புகாரில், மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீனவர் அடித்துக்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் தமிழ்வாணன்(வயது 35). கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும், தமிழ்வாணனுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமிழ்வாணன் தனது வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த சுகந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் பைப், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். 
இதில் பலத்த காயம் அடைந்த தமிழ்வாணன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி தமிழ்வாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
தனிப்படை அமைப்பு
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், மீனவ கிராம மக்கள் மற்றும் பெண்கள், தமிழ்வாணனை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், குமரவேல், சேகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 
4 பேர் கைது
இந்த தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் கலைமாறன்(35), சிவதாஸ் மகன்கள் சுபாஷ்(28), பார்த்திபன்(26), ரவி மகன் ரஞ்சித்(28) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்