கூடலூர் அருகே தினமும் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள்
கூடலூர் அருகே தினமும் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மனித-காட்டுயானை மோதல்கள் ஏற்படுகிறது. பசுந்தீவன தட்டுப்பாடு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது.
இந்த நிலையில் கூடலூர் அருகே செளுக்காடி, 3-ம் மைல், நிமினி வயல் உள்பட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தினமும் 2 காட்டுயானைகள் காலையில் ஊருக்குள் வருகிறது. பின்னர் செளுக்காடி முதல் சாலை வழியாக நடந்து பிற கிராமங்களை கடந்து செல்கிறது.
இதன் காரணமாக காலை நேரத்தில் பால் கொண்டு செல்லும் விவசாயிகள், பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் பீதியில் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் வாகன போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் காட்டுயானைகள் எதிரே வரும் என்ற பீதியில் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- காட்டுயானைகளால் மனித உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் நிம்மதி இழந்து உள்ளோம். தினமும் சரியாக காலை 7 மணிக்கு காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது. அது எந்த திசையில் இருந்து வருகிறது என்று தெரிவதில்லை.
இதனால் அச்சத்துடன் வெளியே நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதேபோன்று மாலை நேரத்திலும் காட்டுயானைகள் வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழலில் வசிப்பதாக உணர்கிறோம். வனத்துறையினரும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.