அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கடைகளுக்கு சீல்

பொள்ளாச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-04-30 17:25 GMT
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 

4 கடைகளுக்கு ‘சீல்’ 

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம் நேருவீதி, பல்லடம் ரோடு ஆகிய இடங்களில் நகரமைப்பு அதிகாரி பாலாஜி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் உதயகுமார், வெங்கடேசன், ஜான்சிராணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, நேரு வீதியில் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப் பட்ட 3 கடைகளுக்கும், பல்லடம் ரோட்டில் ஒரு கடைக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

அளவைபணி 

மகாலிங்கபுரம் மனைப்பிரிவில் குடியிருப்பு பகுதியில் வணிக உபயோக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு வாகன நிறுத்து மிடம் ஏற்படுத்தாதது மற்றும் திட்ட அனுமதி பெறாத கட்டிடங் கள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப் பட்டது. 

அந்த வழக்கின் தீர்ப்பின்படி கடந்த மார்ச் மாதம் 4 வணிக உபயோக கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டது. மேலும் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர் முன்னிலையில் அளவைபணி மேற்கொள்ளப்பட்டது. 

அதைத்தொடர்ந்து தற்போது அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. எனவே அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்