இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் முண்டியடித்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அன்றைய தினம் இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அசைவ பிரியர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு சனிக்கிழமையே இறைச்சி, மீன்களை வீட்டில் வாங்கி வைத்து விட்டனர். இதனால் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எனவே சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அலைமோதிய மக்கள் கூட்டம்
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் ஆகியவை இயங்காது. அதுபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் நாளையும் மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் இயங்காது என்பதால் அசைவ பிரியர்கள் பலர் நேற்றைய தினமே இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான அசைவ வகைகளை வாங்கிச்சென்றனர்.
இதனால் ஆட்டிறைச்சி, கோழிக்கறி கடைகள் மற்றும் மீன் கடைகள், மீன் மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விழுப்புரம் நகரில் கே.கே.சாலை, மந்தக்கரை, மருதூர், வடக்கு தெரு, கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன் மார்க்கெட்டில்....
அதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் நேற்று மாலை 5 மணியில் இருந்து மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பலர், அரசின் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டும், சமூக இடைவெளியை மறந்தும் மீன்களை வாங்கிச்சென்றதை காண முடிந்தது.
தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் கடல் மீன்கள் வரத்து இல்லாத நிலையில் ஏரி மீன்களான கட்லா, லோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை பொதுமக்கள் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர். இதனால் மீன் மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது.
அதேநேரத்தில் பொதுமக்கள் மத்தியில், கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயின் அச்சம் சிறிதளவும் இல்லாமல் இறைச்சி மற்றும் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் இதுவே கொரோனா பரவலுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம்
அதேபோல் இன்றும், நாளையும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்பதால் மதுபான வகைகளை வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர். ஏற்கனவே பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலையில் இருந்து மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பலர் 2, 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை முண்டியடித்துக்கொண்டு மொத்தமாக வாங்கிச்சென்றதை காண முடிந்தது. பல கடைகளில் சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு திருவிழா கூட்டம்போல் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் மதுபான வகைகளை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் திக்குமுக்காடினர்.