பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து நகை-பணம் பறிப்பு சங்கராபுரத்தில் 2 பேர் அதிரடி கைது
சங்கராபுரம் அருகே வாட்ஸ்-அப், முகநூல் மூலம் நட்பாக பழகி பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து நகை-பணத்தை பறித்ததாக 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சங்கராபுரம்
ஜவுளிக்கடை உரிமையாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமைபாலன் மனைவி பாலின்ராணி(வயது 27). இவர் அதே ஊரில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது முகநூல்(பேஸ்புக்) மற்றும் வாட்ஸ்-அப் மூலம் ஆண் நபர் ஒருவர் பேசி நட்பாக இருந்துள்ளார். பின்னர் அந்த ஆண் நண்பர் பாலின்ராணியை நேரில் பார்ப்பதற்காக அவரது ஜவுளிக்கடைக்கு வந்தார்.
3 பவுன் சங்கிலி
அப்போது பாலின்ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த அவர், அதை கழற்றி தாருங்கள் பார்த்து விட்டு தருகிறேன் என்று கூறினார். இவரது பேச்சை நம்பிய பாலின் ராணி தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்தார்.
இதற்கிடையே கடைக்கு துணி எடுக்க வாடிக்கையாளர்கள் வந்ததால் பாலின்ராணியின் கவனம் வாடிக்கையாளர் பக்கம் திரும்பியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த நண்பர் அங்கிருந்து நைசாக எழுந்து வெளியே நின்ற காரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.
போலீசில் புகார்
இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பாலின்ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற நண்பரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அடுத்த குளத்தூர் மும்முனை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த விசுவாசகுமார் மகன் மனோஜ்குமார் (வயது 25), ராஜேந்திரன் மகன் கவுதம் (27) என்பது தெரியவந்தது.
பெண்களிடம் உல்லாசம்
மேலும் இவர்கள் பாலின்ராணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை அபேஸ் செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பட்டதாரியான மனோஜ்குமார், நண்பர் கவுதமுடன் சேர்ந்து வாட்ஸ்-அப், முகநூலில் பெண்களிடம் நைசாக பேசி நட்பை ஏற்படுத்தி கொள்வார்கள். பின்னர் அவர்களை நேரில் சந்தித்து மிரட்டி உல்லாசம் அனுபவிப்பதோடு அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இப்படி சென்னை, திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களின் முகநூல், வாட்ஸ்-அப் வலையில் விழுந்துள்ளனர். இதில் உல்லாசம் அனுபவித்தும், நகை-பணத்தை பறித்துச் சென்றது என 30 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நண்பருடன் கைது
இதையடுத்து மனோஜ்குமார், கவுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார் மற்றும் 4½ பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ்-அப், முகநூல் மூலம் பெண்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து நகை-பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.