வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 43 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் வாக்குஎண்ணும் மையத்திற்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு 4 வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
43 பேருக்கு தொற்று உறுதி
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 3600 பேர் கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்களில் கடந்த 28-ந்தேதி பரிசோதனை செய்த 1631 பேரின் முடிவுகள் வெளியானது. அதில் முகவர்கள், அரசு ஊழியர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்று முகவர்
நேற்று முன்தினம் பரிசோதனை செய்த நபர்களுக்கு முடிவுகள் வரவில்லை. கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பதிலாக மாற்று முகவர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் வழங்கவேண்டும். மேலும் அவர்களும் கொரோனா பரிசோதனை செய்து இன்று(சனிக்கிழமை) மதியத்திற்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.