கடலூரில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை காதலித்ததை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு

காதலித்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-30 16:23 GMT
கடலூர், 

கடலூரில் நடந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் வெளிச்செம்மண்டலம் சண்முகாநகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் புருஷோத்தமன் (வயது 23). இவர் கடலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் புருஷோத்தமன் தந்தை ஜெயராமனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் புருஷோத்தமனை கண்டித்தார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

சாவு

இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி ஜெயராமன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்