தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி ஒரே நாளில் 296 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். ஒரேநாளில் 296 பேருக்கு தொற்று ஏற்பட்டது.;
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 50 வயது தி.மு.க. பிரமுகர் கொரோனா பாதிக்கப்பட்டு தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே சுப்புலாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
296 பேர்
இந்நிலையில் ஹைவேவிஸ் அருகே மேல்மணலாறில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் உள்பட நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 296 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 203 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 187 பேர் குணமாகினர். இதுவரை பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 384 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.