வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டதால், திண்டுக்கல் மாவட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Update: 2021-04-30 15:30 GMT
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. 

கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள், வணிக வளாகங்கள் திறப்பதற்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளன. 

அதேபோல் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மற்றொரு இடமான வங்கிகளும் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. 

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. 

மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. 

வங்கிகளின் நுழைவாயிலுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் நிறுத்தப்பட்டு, குறைந்த அளவிலேயே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

அவர்கள் வெளியே வந்ததும் வெளியே நிற்பவர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர்.


இதற்கிடையே மாதத்தின் தொடக்க நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் விடுமுறை ஆகும். 

இதனால் திண்டுக்கல்லில் நேற்று பெரும்பாலான வங்கிகளில் பண பரிமாற்றம் செய்வதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவிலான மக்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

இதனால் ஒரு சில வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் வெளியே காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்