ஊரடங்கின் போது மக்கள் வெளியே செல்வதற்காக போலீஸ் சார்பில் வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்படாது போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பேட்டி

ஊரடங்கின் போது மக்கள் வெளியே செல்வதற்காக போலீசார் சார்பில் வாகனங்களுக்கான அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்படாது என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-30 15:22 GMT
பெங்களூரு, 

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நேற்று முன்தினத்தில் இருந்து வருகிற 11-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பொதுமக்கள் வெளியே செல்வதற்காக, அவர்களின் வாகனங்களுக்காக அடையாள அட்டைகளை போலீசார் வழங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2020) ஊரடங்கின் போது போலீஸ் சார்பில் மக்கள் வெளியே செல்ல, அவர்களது வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு போலீசார் சார்பில் எந்த வாகனங்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படாது. கடந்த ஆண்டு போலீசாரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, உத்தரவு கடிதங்கள் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது ஊரடங்கின் போது பல்வேறு தரப்பினரும் வெளியே செல்ல அரசே அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளித்துள்ளது. அதனால் போலீசார் சார்பில் தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டிய அவசியமில்லை. பெங்களூரு நகரிலும் இதே விதிமுறைகள் அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மக்கள் மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்