வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் தேனி கலெக்டர் தகவல்

வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேனி கலெக்டர் தெரிவித்தார்

Update: 2021-04-30 14:31 GMT

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தபால் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கும்.
அடையாள அட்டை
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் அதன் முடிவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்பாக படிவம் 18 மற்றும் அடையாள அட்டையுடன் வருகை தர வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் கைபேசி கொண்டு வர அனுமதி இல்லை. வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர்கள் மூலமாக கைபேசியினை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறையில் ஒப்படைக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் நாளில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜைகளில் மட்டுமே பணியாற்றிட வேண்டும்.
கொரோனா பரிசோதனை
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என மொத்தம் 1,059 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள 1,833 அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களில் 581 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைவரும் முகக்கவசம், முகவுறை (பேஸ் ஷீல்டு), கையுறை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையின் போது உடல் வெப்பநிலை மாறுபாடு கண்டறியும்பட்சம் கண்டிப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தொடர்பான அரசால் வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றி, வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமுகமாகவும் நடக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்